பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்


பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2021 10:58 PM IST (Updated: 2 Nov 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

சரவெடிகளை தவிர்க்க வேண்டும். பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை, 
சரவெடிகளை தவிர்க்க வேண்டும். பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். 
காற்று மாசு
மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன. 
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நிபந்தனை
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு களை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும். எனவும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. 
மேலும் சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
சரவெடிகள்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 
சுற்றுச்சூழலை, பாதிப்பு இல்லாமல், பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். 
பாதிப்பு
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story