கோவையில் பருவமழை தீவிரம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கோவையில் பருவமழை தீவிரம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 3:36 PM GMT (Updated: 3 Nov 2021 3:36 PM GMT)

கோவையில் பருவமழை தீவிரம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவை

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சாலையில் மரம் விழுந்த தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

வடகிழக்கு பருவமழை

கோவையில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, சிறு வாணி அணை நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கோவையில் காற்றுடன் பெய்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு செல்லும் சாலையில் மரம் விழுந்தது. இதன் காரணமாக அநத சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து மின்வாரிய ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றினர். 

வீடு இடிந்தது 

இதேபோல் பேரூர் அருகே உள்ள பூலுவப்பட்டி கிராமத்தில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடு ஒன்று இடிந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், பாதிப்பு ஏற்படவில்லை. தொடரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

 இந்த ஆற்று தண்ணீர் வெள்ளலூர், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங் களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ அல்லது துணி வைக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சேறும் சகதியுமாக மாறிய சாலை 

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை லங்கா கார்னர் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் சிங்காநல்லூரில் உள்ள கிருஷ்ணசாமி லே-அவுட் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. 

தொடர் மழை யால் மாநகராட்சிக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளைம், போத்தனூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறும்போது, கோவையில் இன்னும் 2 நாட்களுக்கு பருவமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை 330 மி.மீ. அளவுக்கு பெய்யும் என்று எதிர்பார்த்து உள்ளோம். இதுவரை 99.6 மி.மீ. அளவுக்கு பெய்து உள்ளது என்றார். 

மழை காரணமாக கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் அணை நீர்மட்டம் 44 அடியாக இருந்தபோது கேரள அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து உள்ளது.

 இந்த அணையில் இருந்து தண்ணீரை கேரள அதிகாரிகள் வெளியேற்றுவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 


Next Story