கோவை கடைவீதிகளில் தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது


கோவை கடைவீதிகளில் தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது
x
தினத்தந்தி 3 Nov 2021 9:28 PM IST (Updated: 3 Nov 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

கோவை கடைவீதிகளில் தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது

கோவை

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவையில் நேற்றும் ரெயில்கள், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கடைவீதிகளில் தீபாவளிக்கு இறுதிக்கட்ட விற்பனையும் 'களை' கட்டியது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் கோவையில் தங்கி இருக்கும் வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். 

இதனால் கோவையில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 
கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

களை கட்டியது 

மேலும், ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து பரிசோதனை மேற்கொண்டனர். 

அதுபோன்று பஸ்நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், முகக்கவசம் அணிந்து செல்லவும் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு முந்தைய தினமான  இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியது. இதனால் டவுன்ஹால், ராஜவீதி, பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை பகுதிகளில் புத்தாடை, நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 

போலீசார் கண்காணிப்பு 

போலீசார், கண்காணிப்புக் கோபுரங்களில் நின்றபடி, பைனாகுலர் வழியாக கூட்டத்தில் திருட்டு, வழிப்பறியைத் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கேரளா மாநில எல்லையான கோவை மாவட்டம் வாளையார் சோதனை சாவடி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  

அதுபோன்று கோவையில் உள்ள அனைத்து இனிப்பு, பலகார கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். 


Next Story