கோவை பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி


கோவை பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி
x
தினத்தந்தி 3 Nov 2021 9:31 PM IST (Updated: 3 Nov 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

கோவை பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி

கோவை

கோவையை சேர்ந்த பழங்குடியின மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். டாக்டராகி ஏழைகளுக்கு சேவையாற்ற போவதாக தெரிவித்து உள்ளார். 

பழங்குடியின மாணவி

கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி (வயது 19). மலசர் பழங்குடியின மாணவியான இவர், சமீபத்தில் நடந்த நீட்தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

பழங்குடியின மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கு 108 முதல் 137 மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சங்கவி, 202 மதிப் பெண் பெற்றுள்ளதால், அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விடும். 

முதல் டாக்டர் 

மலசர் பழங்குடியின மாணவியில் முதல் டாக்டராகும் சாதனையை யும் படைக்கிறார். சங்கவியின் தந்தை முனியப்பன் இறந்துவிட்டார். தாயார் வசந்தாமணி கண்பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி, தனது விடாமுயற்சியால் சாதித்து உள்ளார். 

சங்கவி நீட்தேர்வில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் அவர் வசிக்கும் கிராமத்தில் பிளஸ்-2 வரை படித்தவர் என்ற சிறப்பையும் பெற்றவர். இது குறித்து மாணவி சங்கவி கூறியதாவது:-

ஏழ்மை நிலை

எனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தாலும், படித்து முன்னேற வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்தது. இதன் காரணமாக குடும்ப கஷ்டத்தை உணர்ந்து உத்வேகத்துடன் படித்தேன். 10-ம் வகுப்பு வரை குமிட்டிபதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பிளஸ்-2 தேர்வில் 925 மதிப்பெண் பெற்றேன். முதலில் 2018-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். அதில் 96 மதிப்பெண் கள் மட்டும் பெற்றேன். அப்போது எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் மேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்தேன்.

டாக்டராகி சேவை செய்வேன்

அதன்பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட எங்களது கிராமத்துக்கு சமூகஆர்வலர்கள் பலர் வந்தனர். அவர்கள் எனது நிலையை அறிந்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் எனது தாயாரின் கண் அறுவை சிகிச்சைக்கும் உதவி செய்தனர். 

நீட்தேர்வு எழுதவும் உதவி செய்தனர். இதன்பயனாக 2-வது முறையாக நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளேன். என்னைப்போல் மற்ற மாணவ-மாணவிகளும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை. நான் டாக்டருக்கு படித்து கிராமப்புறத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். 

பழங்குடியின மாணவி சங்கவி நீட்தேர்வில் வென்று சாதனை படைத்து உள்ளது அந்த கிராமத்தினரை மகிழ்ச்சி அடையச் செய்து உள்ளது.


Next Story