பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு
பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 11 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
பொள்ளாச்சி நாச்சிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 76). இவர் நேற்று முன் தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் துணி காய போட்டுக் கொண்டு இருந்தார்.
ஒரு ஆணும், பெண்ணும் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களிடம் ஜெயலட்சுமி யார் என்று கேட்பதற்குள், 2 பேரும் அந்த மூதாட்டியை கீழே தள்ளினர்.
மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு 2 பேரும் தப்பி சென்றனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு
விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து 11 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் மூதாட்டியை நகை பறித்ததாக சந்தேகப்படும் நபர்கள் செல்வது தெரியவந்தது. பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே குற்றங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story