தொழிற்சாலை அதிகாரியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை


தொழிற்சாலை அதிகாரியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 3 Nov 2021 9:37 PM IST (Updated: 3 Nov 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலை அதிகாரியின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறை

வால்பாறையில் தொழிற்சாலை அதிகாரியின் வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

அட்டகாசம்

வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன. தற்போது லோயர்பாரளை, அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அக்காமலை எஸ்டேட் தொழிற்சாலை பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. பனிமூட்டம், சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவில்லை. 

வீட்டின் சுவரை உடைத்து சேதம்

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அங்குள்ள தொழிற்சாலை அதிகாரி தயாளன் என்பவரின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இந்த நேரத்தில் அதிகாரியின் வீட்டில் யாரும் இல்லை. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்றது. 

காலையில் எழுந்து பார்த்தபோது தான் காட்டு யானை தொழிற்சாலை அதிகாரியின் வீட்டை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

இதுகுறித்து அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அக்காமலை பகுதியில் காட்டு யானை முகாமிட்டு வருவதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

யானைகள் இடம்பெயர வாய்ப்பு

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் யானைகள் கூட்டம் இடம்பெயர வாய்ப்புள்ளது. 

எனவே அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து அறிந்தால்  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story