பாலாறு வெள்ளத்தில் சிக்கிய 2 காவலாளிகள் மீட்பு
பாலாறு வெள்ளத்தில் சிக்கிய 2 காவலாளிகள் மீட்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கிய 2 காவலாளிகளை தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும் பள்ளி கட்டிடத்தின் மீது மரம் சாய்ந்து விழுந்தது.
காவலாளிகள் மீட்பு
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை தொடர்ந்து காலை வரை நீடித்தது. இதன் காரணமாக ஆழியாறு, உப்பாறு, பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதற்கிடையில் சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழக்கம் போல்
நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த காவலாளிகள் திருமலைசாமி (வயது 60), மகாலிங்கம் (55) ஆகியோர் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். இந்த நிலையில் திடீரென்று அதிகாலை 3 மணிக்கு கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவிலுக்குள் மேடான பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் நேற்று காலை வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் செய்வதற்கு வந்தனர். அப்போது வெள்ளத்தில் சிக்கி காவலாளிகள் 2 பேரும் கோவிலில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி 2 பேரையும் பத்திரமாக மீட்டு வந்தனர். மேலும் வெள்ளம் பெருக்கு காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பள்ளி கட்டிடம்
பொள்ளாச்சி அருகே உள்ள அங்குலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நின்ற மரம் மழைக்கு இடையே வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.
அந்த கட்டிம் பழுதடைந்து இருப்பதால் மாணவ-மாணவிகள் வேறு கட்டிடத்தில் படித்து வருகின்றனர். இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் முறிந்து விழுந்த மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு மற்றும் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஏற்கனவே அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மழை அளவு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சோலையார்-27, பரம்பிக்குளம்-33, ஆழியாறு-77, திருமூர்த்தி-34, அமராவதி-21, வால்பாறை-6, மேல்நீராறு-11.2, கீழ்நீராறு-55, காடம்பாறை-15, சர்க்கார்பதி-75, வேட்டைக்காரன்புதூர்-13.4, மணக்கடவு-4, தூணக்கடவு-19, பெருவாரிபள்ளம்-16, அப்பர் ஆழியாறு-44, நவமலை-33, பொள்ளாச்சி-7, நல்லாறு-87, சுல்தான்பேட்டை-31.
Related Tags :
Next Story