தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Nov 2021 9:40 PM IST (Updated: 3 Nov 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


போக்குவரத்துக்கு இடையூறு

ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே, வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மணிவண்ணன், ஊட்டி.

கரடு, முரடான சாலை

  ஊட்டி மஞ்சனக்கொரையில் இருந்து அன்பு அண்ணா காலனி செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து, ஊர்ந்து செல்கின்றன. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே, இங்கு நடந்து வரும் விபத்துகளை தடுக்க உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.
  மணிமேகலை, மஞ்சனக்கொரை.

போக்குவரத்து நெரிசல் 

  கோத்தகிரி நகரில் வாகன நிறுத்துமிடம் தனியாக இல்லாததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நகரின் முக்கிய சாலைகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனங்களை முறையாக நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  விஷ்ணு, கோத்தகிரி.

கால்நடைகள் தொல்லை 

  கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவை இரவு நேரங்களில் காய்கறி கடைகளில் உள்ள காய்கறிகளை தின்று சேதம் செய்து விட்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நடைபாதையில் சுற்றுவதால் நடந்து செல்லவும் பயமாக இருக்கிறது. எனவே இங்கு கால்நடைகள் சுற்றித்திரிந்து தொல்லை கொடுப்பதை தடுக்க வேண்டும்.
  ராஜன், கோத்தகிரி.

குண்டும் குழியுமான சாலை

  கோவை விளாங்குறிச்சியில் இருந்து தண்ணீர்பந்தல் செல்லும் காந்தி மாநகர் பகுதியில் சேறும் சகதியும் குண்டும் குழியுமாய் காட்சி யளிக்கிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அங்கு கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதிகாரிகள் பழுதான இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  கணேசன், காந்திமாநகர்.

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

  பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரஞ்சித், பொள்ளாச்சி

சுற்றுலா பயணிகள் அவதி

  பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.
  பரதன், ஆனைமலை.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
மேம்பாலத்தில் மரக்கன்று அகற்றம்

  கோவை அவினாசி ரோட்டில் உள்ள மேம்பால தடுப்புச்சுவரில் அரச மரக்கன்று வளர்ந்து வந்தது. இந்த மரக்கன்று வளர்ந்தால் தடுப்புச்சுவர் உடைந்து விபத்து ஏற்பட வாய்ப்பு நிலவியது. எனவே இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மரக்கன்றை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  குமாரசாமி, கோவை.

தாழ்வாக செல்லும் ஒயர்

  தொண்டாமுத்தூரில் இருந்து மலைக்கிராமமான அட்டுக்கல் செல்லும் சாலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இங்குள்ள மின்மோட்டார் அறைக்கு செல்லும் ஒயர் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்கிறது. இதனால் அங்கு எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும்.
  ராஜ்குமார், கெம்பனூர்.

வீணாக கிடக்கும் நிழற்குடை

  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வால்பாறை சாலையில் காந்திபுரம் பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்க பணி காரணமாக அந்த நிழற்குடை அகற்றப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது வீணாக கிடக்கும் அந்த நிழற்குடையை, நிழற்குடை இல்லாத பஸ்நிறுத்தத்தில் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதை செய்ய வேண்டும்.
  நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.

மின்விளக்குகள் ஒளிருமா?

  கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து ஹூசூர் ரோடு வழியாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் வரை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் உள்ளன. அதில் பல விளக்குகள் பழுதடைந்து இருப்பதால் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருட்டாக இருக்கிறது. எனவே அங்கு பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
  குமரன், கோவை.

  


Next Story