தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
பொள்ளாச்சி
ரேஷன் அரிசி கடத்லை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இதை கடத்தல்காரர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக கேரளாவுக்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், நடுப்புணி, வாளையாறு ஆகிய சோதனை சாவடிகளில் நேற்று முன்தினம் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
குண்டர் தடுப்பு சட்டம்
அரசு விலையில்லாமல் வழங்கும் ரேஷன் அரிசியை பொதுமக்கள் வாங்கி கடத்தல்காரர்களிடம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே அரிசி விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்களும் கடத்தல்காரர்கள் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story