சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது
சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது
வால்பாறை
வால்பாறையில் தொடர்ந்து கனமழையாக பெய்து வருவதால் சோலையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
சோலையாறு அணை
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய சமயத்தில் குறைவாகவும் அதனை தொடர்ந்து கனமழையாகவும் பெய்தது. இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணைக்கு நாளுக்கு நாள் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டேயிருந்தது.இதனால் சோலையாறு அணை கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஜூலை 24-ந் தேதி உபரி நீர் கேரளாவிற்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை குறையத் தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டேயிருந்தது.இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 25-ந் தேதி வரை தனது முழு கொள்ளளவில் நீடித்தது.
தொடர்ந்து கனமழை
தென்மேற்கு பருவமழை முடிந்து லேசான மழை பெய்து வந்ததால் சோலையாறு அணையின் நீர் மட்டம் குறைந்தது.இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதால் சோலையாறு அணைக்கு மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.
மேலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. மேலும், நேற்று காலை 6 மணி நிலவரப்படி 161 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 1,083 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிமடைவதற்கான வாய்ப்பு உள்ளதால் சோலையாறு அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி. அணைகள்
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2480 கன அடி வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி மதகு வழியாக வினாடிக்கு 2746 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. இதேபோன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 899 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 980 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை அளவு
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
சோலையார் 45 மி.மீ., பரம்பிக்குளம் 15 மி.மீ., ஆழியாறு 56 மி.மீ., திருமூர்த்தி 16 மி.மீ., அமராவதி 13 மி.மீ., வால்பாறை 31 மி.மீ., மேல்நீராறு 42 மி.மீ., கீழ்நீராறு 25 மி.மீ., காடம்பாறை 25 மி.மீ., வேட்டைக்காரன்புதூர் 13.8 மி.மீ., தூணக்கடவு 29 மி.மீ., பெருவாரிபள்ளம் 57 மி.மீ., அப்பர் ஆழியாறு 56 மி.மீ., நவமலை 41 மி.மீ., பொள்ளாச்சி 15.2 மி.மீ., நல்லாறு 78 மி.மீ.
Related Tags :
Next Story