மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது


மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 5 Nov 2021 10:30 PM IST (Updated: 5 Nov 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

வடவள்ளி

கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானவர்கள் காப்பு கட்டினர். 

கந்தசஷ்டி விழா

கோவையை அடுத்த வடவள்ளியில் மருதமலை முருகன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும், கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோ-பூஜையும், அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  இதையடுத்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

காப்பு கட்டும் நிகழ்ச்சி

இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 9-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.

9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 3 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. பின்னர் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

திருகல்யாணம்

மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பாலதண்டாயுதபாணி கோவில்

இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், சக்தி வேலுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி, தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Next Story