துடியலூர் அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


துடியலூர் அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 5 Nov 2021 10:31 PM IST (Updated: 5 Nov 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

துடியலூர்

துடியலூர் அருகே இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 45). இவர் அகில பாரத இந்து மகா சபாவில் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு, வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இரவு 11 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பதறிபோன சுபாஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

 இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைத்தனர். மர்ம நபர்களை பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை 

இந்த சம்பவம் குறித்து சுபாஷ் தடாகம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் இந்து மகாசபா நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு செல்வது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர் சம்பவங்களால் அச்சம்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுபாஷ் தனது காரில் வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வளர்த்து வந்த வெளிநாட்டு நாய்க்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இதுபோன்ற நடைபெறும் சம்பவங்களில் சுபாஷ் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று சுபாஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
1 More update

Next Story