சாலையோரத்தில் நின்ற கார் மீது மொபட் மோதியதில் சிறுவன் பலி
சாலையோரத்தில் நின்ற கார் மீது மொபட் மோதியதில் சிறுவன் பலி
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே சாலையோரத்தில் நின்ற கார் மீது மொபட் மோதியதில் சிறுவன் பலியானார். மேலும் காயமடைந்த அவனுடைய பெற்றோர் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் மீது மொபட் மோதல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக சிவக்குமார் தனது மனைவி ரம்யா (30), மகன்கள் பிரணவ் (7), சாய் (2) ஆகியோரை மொபட்டில் அழைத்துக்கொண்டு குன்னத்தூர் பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன வாகன டிரைவர் சண்முகம் (54) என்பவர் அவரது காரில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்போனில் அழைப்பு வந்ததால் சண்முகம் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
சிறுவன் பலி
இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட சிவக்குமார், அவருடைய மனைவி, மகன்கள் பிரணவ், சாய் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில், பிரணவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story