ரெயில்வே பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ரெயில்வே பள்ளிகளை மூடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை,
ரெயில்வே பள்ளிகளை மூடும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரெயில்வே பள்ளிகள்
இந்திய ரெயில்வே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால், ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன், அவ்வப்போது தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் ரெயில்வே நடத்தி வரும் பள்ளிகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைக்கவும் அல்லது மூடவும் மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் குழு பரிந்துரை செய்துள்ளது. அதனை தொடர்ந்து, அனைத்து மண்டல ரெயில்வேக்களுக்கும் ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அந்தந்த மண்டலங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகளின் நிலைமை குறித்து நவம்பர் மாதம் 4-ந் தேதிக்குள் (நேற்று முன்தினம்) கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில்
நாடு முழுவதும் தற்போது 94 ரெயில்வே பள்ளிகள் உள்ளன. இதில், தென்னக ரெயில்வேயில் மதுரை, ஈரோடு, போத்தனூர், திருச்சி, பாலக்காடு, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய இடங்களில் ரெயில்வே பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், சுமார் 2,600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பெரும்பாலான பள்ளிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது உருவாக்கப்பட்ட பழமையான பள்ளிகளாகும். பள்ளிகளை மூடும் இந்த திட்டம் குறித்து, தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுசெயலாளர் நவுசாத் கூறியதாவது:-
மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில், ரெயில்வே பணியாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளையும் மூட வேண்டும் என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இன்றைக்கு கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது, தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு ஆதரவளிப்பது போன்றது. மதுரை ரெயில்வே பள்ளி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.
தொடர் போராட்டம்
ஆங்கிலோ இந்திய கல்வி முறையில் இந்த பள்ளியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தமிழக அரசு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வந்த போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இத்தகைய பெருமை வாய்ந்த பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியுடன் இணைக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்பது கேலிக்குரியதாக உள்ளது. சுமார் 87 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ரெயில்வே நிதி உதவி செய்து வருகிறது.
அதாவது, அங்கு படிக்கும் ரெயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்காக இந்த உதவியை செய்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்கினால் ரெயில்வே பணியாளர்கள் தங்களது குழந்தைகளை எந்த பள்ளியிலும் சேர்க்க விரும்பமாட்டார்கள். அடிப்படை காரணத்தை புரிந்து கொள்ளாமல் பள்ளிகளை மூட வேண்டும் என்பது தவறான முடிவாகும். மதுரை ரெயில்வே பள்ளி விவகாரத்தில், கோட்ட நிர்வாகம் உரிய முடிவு எடுக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறுவழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை டி.ஆர்.இ.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story