பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு விவாதம் தேவையற்றது-மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மத்திய அரசின் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு விவாதம் தேவையற்றது என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,நவ.6-
மத்திய அரசின் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு விவாதம் தேவையற்றது என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மீனாட்சி அம்மன் கோவிலில்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோவிலை புதுப்பித்து, பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் ஆதிசங்கரர் சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி நாடு முழுவதும் உள்ள ஜோதிர்லிங்க தலங்கள், சக்தி பீடங்கள், முக்கியமான வழிபாட்டு தலங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் மூன்று முறை பயணம் செய்த ஆதிசங்கரர் சமாதிபீடம் கேதார்நாத்தில் அமைந்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கேதார்நாத் கோவிலை சீரமைக்கும் பணியை மத்திய அரசு 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் ஆதிசங்கரரின் சிலையையும் கேதார்நாத்தில் திறந்து வைத்துள்ளார். அங்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உள்நோக்கம் கற்பித்து விவாதிக்க வேண்டியதில்லை. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மத்திய அரசின் விலை குறைப்பு நடவடிக்கையை அனைவரும் வரவேற்க வேண்டும். இது காலம் தாழ்த்திய நடவடிக்கை அல்ல. அனைத்து செயல்பாட்டுக்கும் சில காலங்கள் உண்டு. வரி வருமானங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு செலவிடப்படுகிறதா? என்பதை தான் காணவேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் விலை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதுபோலவேதான் தி.மு.க. அரசும் அண்மையில் பெட்ரோல் -டீசல் விலையை குறைத்தது.
வாடிக்கை
இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களிலும் பெட்ரோல் -டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி விலை குறைப்பதாக கூறப்படுவதில் அர்த்தம் இல்லை. மத்திய அரசை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் வாடிக்கையாக வைத்து இருக்கிறது. எந்த வரியைக் குறைத்தாலும் பொதுமக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். மக்களிடம் எவ்விதமான வரி திணிப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு செய்யாது. உலகப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மாவட்ட பாரதீய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
--------
Related Tags :
Next Story