முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது-மதுரையில் வைகோ பேட்டி


முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது-மதுரையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2021 8:14 PM GMT (Updated: 5 Nov 2021 8:14 PM GMT)

முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணைக்காக கடந்த 8 ஆண்டுகளாக நானும் அப்பாசும், 678 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களைத் திரட்டி முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கேரள அரசின் திட்டத்தை முறியடித்தோம். கேரள அரசு தொடக்கத்தில் இருந்தே இந்த அணையை உடைக்க வேண்டும் என திட்டம் தீட்டி கொண்டிருக்கிறது. கரிகாலன் கட்டிய கல்லணையை விட முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அணை வலுவாக தான் இருக்கும். கேரள அரசின் திட்டம் எடுபடாது. 
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே தமிழக அரசு ஏற்பாடு செய்யலாம் என சொல்கிறார். அதன்படி தமிழக அரசு கவர்னருக்கு கடிதம் ஒன்று எழுதியது. அதனை பழைய கவர்னர் குப்பையில் போட்டுவிட்டார். தற்போது தமிழக புதிய கவர்னரிடம் முயற்சி செய்து வருகிறோம். முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story