இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 14-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - மா.சுப்பிரமணியன் பேட்டி


இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 14-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2021 9:25 AM IST (Updated: 6 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

ஒட்டுமொத்தமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், யார் யார் எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர், எந்த நிலையில் உள்ளனர் என்கின்ற அனைத்து விவரங்களும் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கேன்சர் ரிஜிஸ்ட்ரி என்ற பதிவேட்டின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

காரப்பேட்டை ஆஸ்பத்திரியில் ரூ.118 கோடியே 46 லட்சம் செலவில் மிகப் பெரிய அளவிலான புற்றுநோய்க்கான மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இன்னமும் ஒரு ரூ.180 கோடி மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் கட்டிட வசதிகள் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியும்.

தொடர் விடுமுறையுடன், நாளை (இன்று) தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பொழிவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை (இன்று) நடைபெறவிருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) அன்று நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கோவேக்சின் 2-வது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 903 என இருக்கிறது. அரசின் கையிருப்பில் 65 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதால் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல், 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேர் 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

வீடு தேடி வந்து தடுப்பூசி போடும் பணி செய்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நமக்கு முழு ஓய்வு, முழு தீர்வு என்பது 100 சதவீத தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் டாக்டர் தாரஸ் அகமது, கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, க.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story