கோவையில் மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது


கோவையில் மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது
x
தினத்தந்தி 6 Nov 2021 10:15 PM IST (Updated: 6 Nov 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது

கோவை

கோவையில் மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.

வடகிழக்கு பருவமழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. 

கோவை மாவட்டத்தில் நேற்று மதியம் கவுண்டம்பாளையம், பேரூர், காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், ரெயில் நிலையம் மற்றும் கவுண்டம்பாளையம், துடியலூர், தடாகம், பன்னிமடை, கணுவாய், உள்ளிட்ட பலத்த மழை பெய்தது. 

 இரவு வரை நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலையோரம், சாலைகளில் இருந்த பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

வாகன ஓட்டிகள் தவிப்பு

லங்கா கார்னர், கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆனைக்கட்டி-மாங்கரை பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. 

இதேபோல் மேம்பால பணிகள் நடக்கும் பெரியநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். திடீர் மழையால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். மேலும் ஒரு சிலர் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தப்படி சென்றனர்.

2 வீடுகள் இடிந்து சேதம்

கோவையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, புலியகுளம் ரெட்பீல்டு பகுதியில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இதேபோல் பேரூரை அடுத்த மத்தம்பாளையம் அருகே மழைக்கு ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மழையின் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை

நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை குற்றாலம் அணைக்கு குளிக்க சென்றனர்.

ஆனால் அங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவ்வாறு திரும்பும் வழியில் சிலர், சித்திரைச்சாவடி, பேரூர், புட்டுவிக்கி, உள்ளிட்ட தடுப்பணைகளில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில், சிறுவர்களும் ஆபத்தை உணராமல் குளித்தனர். 

சரவணம்பட்டி எஸ்.எஸ்.குளம் பகுதியில் தொடர் மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story