வைகை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள்
மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்ன?என்று தெரியவில்லை. அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்ன?என்று தெரியவில்லை. அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
மாணவர்கள்
திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன் மகன் விஸ்வநாதன் (வயது 21). கல்லூரியில் சி.ஏ. படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சிவகுமார் மகன் அருண்வசந்த் (18). பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள் இருவரும் பரவையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரிலிருந்து உறவினர் வீட்டுக்கு வந்தனர்.திருவிழாவின் கடைசி நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட இருவரும் குளிப்பதற்காக விளாங்குடியை சேர்ந்த சரவணகுமார் (19) என்பவருடன் நேற்று மதியம் 2 மணிக்கு பரவை-துவரிமான் வைகை ஆற்று பாலம் அருகில் வந்தனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
அங்கு விளையாடியபடி வைகை ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வைகை ஆற்று வெள்ளத்தில் விஸ்வநாதனும், அருண் வசந்தும் அடித்து செல்லப்பட்டனர்.இதைக் கண்ட சரவணகுமார் கரையில் இருந்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டார்.பின்னர் ஊருக்குள் ஓடி வந்து உறவினர்களிடம் தெரிவிக்கவே அனைவரும் அங்கு சென்று ஆற்றில் இறங்கி தேட தொடங்கினார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையில் போலீசார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரட்டை வாய்க்கால்வரை தேடும் பணி நடந்தது. நேற்று இரவு 7 மணி வரை தேடியும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று தேடுகிறார்கள்
வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாலும், இருட்டாகி விட்டதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களை தேடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். வைகை ஆற்றில் குளித்த போது 2 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story