மதுரை-கோவை இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் சிறப்பு ரெயில்கள் இயக்கம்


மதுரை-கோவை இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2021 1:28 AM IST (Updated: 7 Nov 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-கோவை இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை,

மதுரை-கோவை இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ரெயில்கள் நிறுத்தம்

கொரோனா ஊரடங்கால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பாசஞ்சர் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மாநில அரசு ஒப்புதல் கிடைக்காததால், பாசஞ்சர் ரெயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்படுவதாக தென்னக ரெயில்வே தெரிவித்தது. 
இந்த நிலையில், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட தென்மாவட்டங்களுக்கான பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான கட்டணத்துடன் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படவுள்ளன.

மதுரை-கோவை

 இதையடுத்து, மதுரை - பழனி மற்றும் பழனி - கோவை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, மதுரை-பழனி சிறப்பு ரெயில் (வ. எண் 06480) மதுரையில் இருந்து வருகிற 11-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.10 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்க்கத்தில் பழனி-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண். 06479) பழனியிலிருந்து வருகிற 10-ந் தேதி முதல் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் பழனியில் இருந்து கோவைக்கு இரு மார்க்கங்களிலும் இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. 
அதாவது, கோவை-பழனி சிறப்பு ரெயில் (வ.எண் 06463) வருகிற 10-ந் தேதி முதல் கோவையில் இருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு பழனி வந்தடையும். மறுமார்க்கத்தில் பழனி-கோவை சிறப்பு ரெயில் (வ.எண்.06462) வருகிற 11-ந் தேதி முதல் பழனியில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் மதுரை-கோவை ரெயில் நிலையம் இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

காரைக்குடி-விருதுநகர்

காரைக்குடி - விருதுநகர் சிறப்பு ரெயில் (வ.எண். 06886) ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களிலும், விருதுநகர் - காரைக்குடி சிறப்பு ரெயில் (வ.எண்.06885) சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்படும். இதில், விருதுநகரிலிருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 9.35 மணிக்கு காரைக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு விருதுநகர் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ெரயில்கள் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும்.
அதேபோல, நெல்லை-தூத்துக்குடி சிறப்பு ரெயில், நெல்லை-செங்கோட்டை சிறப்பு ரெயில், நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் ஆகிய ரெயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த ரெயில்களும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கு முன்பதிவு செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story