நகைக்கடன் நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து ரூ.76 லட்சம் மோசடி - 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை வைத்து ரூ.76 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் ஒரு தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகை்கடன் வழங்கும் நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 31), மகேஷ் (31) ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து நகைக்கு உண்டான பணத்தை பெற்று கொண்டு ரசீது வழங்காமல் அவர்களிடம் உரிய நகைகளை ஒப்படைத்துவிட்டு, நிறுவனத்தில் அந்த வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தனியார் நகைக்கடன் நிறுவன தலைமை அதிகாரிகள் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில், விஷ்ணு காஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
கார்த்திகேயன், மகேஷ் இருவரும் ரூ.2 கிலோ வரை போலியான தங்க நகைகளை வைத்து ரூ.76 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story