சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது


சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 7 Nov 2021 8:21 PM IST (Updated: 7 Nov 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது

கோவை

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. ஆனால் கேரளாவின் நடவடிக்கையால் முழு கொள்ளளவை எட்டுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவாணியில் மழை

கோவை நகருக்கு குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை கேரள வனப்பகுதியில் உள்ளது. 

அணை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கேரள பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த அணைப்பகுதியில் அதிக அளவு மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை அணைப்பகுதியில் மொத்தம் 3,171 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வெள்ள அபாயம்

கடந்த சில ஆண்டுகளாக கேரளாவின் நடவடிக்கை காரணமாக சிறுவாணி அணை தனது முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலை உள்ளது. 

இதற்கு வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு முழு கொள் ளளவு தண்ணீர் நிரம்பவிடாமல் செய்வதாக கேரள அரசு கூறி வருகிறது. 

ஆனால் வனப்பகுதி என்பதால் அணை நிரம்பினாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாகும். ஆனால் 45 அடிவரை மட்டும் சிறுவாணி அணையில் தண்ணீர் தேங்குவதற்கு கேரள அரசு அனுமதிக்கிறது. 

தண்ணீர் திறப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி அணையில் இருந்து வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது. 

இதனால் 8 அடி தண்ணீர் குறைந்தது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மீண்டும் நீர்மட்டம் உயர்ந்தது.

நேற்று அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிக்கு 101 எம்.எல்.டி. (10 கோடியே 10 லட்சம் லிட்டர்) எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

குடிநீர் பிரச்சினை வராது

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, சிறுவாணி அணையில் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்குமாறு தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. 

அதை கேரள அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைய தண்ணீரை வைத்து ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். குடிநீருக்கு பிரச்சினை வராது என்றனர்.


Next Story