வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்க 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன-அமைச்சர் செந்தில்பாலாஜி


வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்க  1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன-அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 7 Nov 2021 10:31 PM IST (Updated: 7 Nov 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்க 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன அமைச்சர் செந்தில்பாலாஜி

வால்பாறை

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்க 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

மக்கள் சபை நிகழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி சப் கலெக்டர் (பொறுப்பு) சிவக்குமாரி, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்கள் இருந்த இடங்களுக்கே சென்று மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

15 ஆயிரம் மனுக்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 150 இடங்களில் பெறப்பட்ட 15 ஆயிரம் மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறையில் 1,500 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான உத்தரவு உங்கள் கைகளில் வந்து சேரும் என்று உறுதியளிக்கிறேன்.

அரசு தொழிற்பயிற்சி பள்ளி

வால்பாறையில் கொடுக்கப்பட்ட மனுக்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு, தொழில்வரி ரத்து செய்ய வேண்டும், சம்பளம் தொழிலாளர்கள் கைகளில் வழங்க வேண்டும், எஸ்டேட் பகுதியில் சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும்,

 மூடப்பட்ட முடீஸ் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி தொடங்க வேண்டும், படகு இல்லத்தை பராமரித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் வால்பாறைக்கு வரும் வழியில் சுற்றுலா பயணிகள் என்னை நிறுத்தி முதல்-அமைச்சரின் ஆட்சி சிறப்பாக செல்வதாக கூறி தங்களது மனுக்களை கொடுத்தனர். அந்த அளவிற்கு அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார்.

முதியோர் உதவி தொகை

குறிப்பாக கோவை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்கும் அனைவருக்கும் உதவிதொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என்ற சிறப்பு உத்தரவை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போது கொடுத்த 505 வாக்குறுதியில், 202 வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முடிவில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

1 லட்சம் மின்கம்பங்கள் தயார் 

ஆனைமலை தாலுகாவில் ஓடையகுளம் பேரூராட்சியில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

 வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தி உயர்மட்ட குழு அமைத்துள்ளார். மின்வாரிய சார்பில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 தமிழகத்தில் ஒரே நேரத்தில் 216 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது வருகிறது. புதிதாக 4,500 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார துறையில் 1 லட்சத்து 46 பணியிடங்களில் 56 பணியிடங்கள் காலியாக உள்ளது. மின்சார துறைக்கு 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. மேலும் ஆண்டுக்கு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம். எனவே எந்தெந்த பணிகள் அவசர தேவையாக உள்ளதோ அதன் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

21 பேருக்கு வன உரிமை பட்டா 

வால்பாறையில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில், கடந்த 2 ஆண்டுகளாக தெப்பக்குளமேடு பகுதியில் வன உரிமை பட்டா கேட்டு போராட்டம் நடத்தி வந்த கல்லார் பழங்குடியின கிராம மக்கள் 21 பேருக்கு வன உரிமை பட்டா வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு முதியோர் உதவி தொகை பெறுவதற்கான உத்தரவு, ஒருவருக்கு வருவாய் துறையின் ஒருங்கிணைந்த சான்று உள்பட 32 பேருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கட்சியினரை கண்டித்த அமைச்சர் 

நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் தி.மு.க.வினர் முண்டியடித்துக்கொண்டு ஏற முயன்றனர். இதனைக்கண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, அவர்களை கீழே இறங்குமாறும், இது அரசு விழா, அதனால் கட்சியினர் கட்டுக்கோப்பை மீற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அமைச்சரின் இந்த செயலை அரசு அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.


நீட் தேர்வில் வெற்றி:
மாணவனுக்கு அமைச்சர் நேரில் பாராட்டு

கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சியில் வசிக்கும் பழங்குடியின மாணவன் ராதாகிருஷ்ணன். 2019-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஆனைமலையில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர் ராதாகிருஷ்ணின் வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவன் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி அடைந்தார். 


Next Story