மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 Nov 2021 2:15 AM IST (Updated: 8 Nov 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அந்தியூர்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
விடிய விடிய மழை
அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்தியூர் காளிதாஸ் காலனியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
கெட்டிசமுத்திரம் ஏரி
வரட்டுப்பள்ளம் அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பிவிட்டது. இதனால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வினாடிக்கு 166 கன அடி தண்ணீர் வெளியேறியது. 
இந்த மழையால் நீர்மட்ட உயரம் 11.25 அடியாக உள்ள எண்ணமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் நீர்மட்ட உயரம் 14 அடியாக உள்ள அந்தியூர் பெரிய ஏரியில் 7 அடிக்கும், 17.5 அடியாக உள்ள கெட்டி சமுத்திரம் ஏரியில் 12 அடிக்கும், 14.5 அடியாக உள்ள தண்ணீர்பள்ளம் ஏரியில் 12.25 அடிக்கும்,  15.5 அடியாக உள்ள கரும்பாறை ஏரியின் நீர்மட்டம் 11 அடியாகவும் உள்ளது. 
அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
நேற்று முன்தினம் அந்தியூர் பகுதியில் 43 மில்லி மீட்டரும், அத்தாணியில் 15 மில்லி மீட்டரும், ஆப்பக்கூடல் சக்தி நகரில் 34 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது. 
மொடக்குறிச்சி- கொடுமுடி
மொடக்குறிச்சி, எழுமாத்தூர், கணபதிபாளையம் நால்ரோடு, நஞ்சை ஊத்துக்குளி, கோவில்பாளையம், அவல்பூந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை தொடங்கியது. இந்த மழை விடிய விடிய நேற்று அதிகாலை 5 மணி வரை பெய்தது.  இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. 
கொடுமுடி, சாலைப்புதூர், ஒத்தக்கடை, சோளக்காளிபாளையம், பெரிய வட்டம், வெங்கம்பூர், தாமரைப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. 

Next Story