சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு ஏலம்; ஒரே நாளில் 578 ரூபாய் விலை உயர்ந்தது


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு ஏலம்; ஒரே நாளில் 578 ரூபாய் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 8 Nov 2021 2:22 AM IST (Updated: 8 Nov 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.578 உயர்ந்து ரூ.1,890-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.578 உயர்ந்து ரூ.1,890-க்கு ஏலம் போனது.  
பூ மார்க்கெட்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,890-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.1000-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது. 
ஒரே நாளில்...
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,312-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.578-ம், முல்லை ரூ.400-ம், காக்கடா ரூ.500-ம், பட்டுப்பூ ரூ.15-ம், ஜாதிமல்லி ரூ.250-ம், சம்பங்கி ரூ.10-ம், துளசி ரூ.10-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.578 விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
போட்டி
இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘சத்தியமங்கலம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பூக்களை அதிக அளவில் மார்க்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வரவில்லை. 
அதே நேரத்தில் பூக்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்து சென்றனர். இதனால் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,’ என்றனர். 

Next Story