தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்; ஈரோட்டில் மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் பேட்டி
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று ஈரோட்டில் மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று ஈரோட்டில் மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.
புற்று நோய்
இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால், ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அளவில் 4 லட்சம் அலோபதி மருத்துவர்களுடன் கடந்த 93 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற ஒரு அமைப்பு இந்திய மருத்துவ சங்கம் ஆகும். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரில் கடந்த 15 ஆண்டுகளாக 1,200-க்கும் மேற்பட்ட புற்று நோயாளிகளுக்கு சேவைகள் செய்யப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவத்துறை சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
3-வது அலை
தமிழகத்தில் விரைவில் நடமாடும் வாகனம் மூலம் கிராமங்கள் தோறும் சென்று புற்றுநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கிராமங்களிலும், மலை வாழ் பகுதியிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இந்திய மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அந்த அலையினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். எனவே 3-வது அலை வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
மாத்திரை
டாக்டர்கள் உற்சாகமாக பணியாற்ற தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா நோய்க்கான மாத்திரை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே இங்கிருக்கும் டாக்டர்கள் அதிக அளவில் அந்த மாத்திரையை பயன்படுத்துவோம். ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இங்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு சட்டம்
இந்தியாவில் 23 மாநிலங்களில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசு முன்வந்து அகில இந்திய அளவில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சிகிச்சை முறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்பட ஒவ்வொன்றும் தனி தன்மை கொண்டது. அனைத்து வியாதிகளையும் ஒரே மருத்துவ சிகிச்சை மூலம் தீர்க்க முடியாது. மிக்சோபதி என்ற மருத்துவ திட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.
Related Tags :
Next Story