பவானிசாகர் அருகே வனப்பகுதியில் செல்லும் மாயாற்று வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்; கிராம மக்கள் மீட்டனர்
பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட வாகனங்களை கிராமமக்கள் மீட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட வாகனங்களை கிராமமக்கள் மீட்டனர்.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான சாலையில் 25 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீர் கலந்ததால் ஆறு செந்நிறமாக மாறி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மாயாற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்துக்கு தக்காளி பாரம் ஏற்றுவதற்காக நேற்று மாலை சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் மாயாற்றை கடக்க முயன்ற போது வெள்ளம் இழுத்தது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் லாவகமாக வாகனத்தை இயக்கி கரை சேர்த்தார்.
மேலும் சரக்கு வேனை பின்தொடர்ந்து வந்த கார் மற்றும் மற்றொரு சரக்கு வேனையும் வெள்ளம் இழுத்தது. இதில் அந்த வாகனங்கள் கரையோரம் ஆற்று புதை மணலில் சிக்கிக்கொண்டு் நகர முடியாமல் நின்றது.
மீட்பு
இதை பார்த்த கரையோரம் நின்றிருந்த தெங்குமரஹாடா கிராம பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி மற்றொரு வாகனம் மூலம் இழுத்து வாகனங்களை மீட்டனர்.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், அப்போது பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என தெங்குமரஹாடா கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story