கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Nov 2021 9:02 PM IST (Updated: 8 Nov 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியை சேர்ந்தது ஜானகி ராமன் செட்டி சத்திரம் குடியிருப்பு பகுதி. இந்த குடியிருப்பு பகுதியானது சின்ன ஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்து உள்ளது. கனமழை காரணமாக நேற்று இங்கு உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளின் மழை நீரானது, இடுப்பளவு தண்ணீராக தேங்கி குளம் போல காட்சியளித்தது. மேலும் அங்கு குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் ஒருபுறம் இருந்து மறுபுறம் மழைநீர் செல்வதற்கான குழாயில் அடைப்பு இருந்ததால் இத்தகைய நிலை எற்பட்டது. இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையின் காரணமாக அரை மணி நேரத்திற்குள்ளாக தங்களது போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

இதனையடுத்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு மழைநீர் ஒரு புறத்தில் இருந்து அதாவது குடியிருப்பு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலை மறியலாலும், மழைநீரை அகற்றும் சீரமைப்பு பணியாலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story