ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பொள்ளாச்சி
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஆழியாறு அணை
தென்மேற்கு பருவமழையின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை நிரம்பியது. இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மேலும் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 2400 கன அடி நீர் வந்தது. இதையடுத்து வெள்ளப் அபாய எச்சரிக்கை விடுக்கபபட்டு, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அடிக்கடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் ஆழியாற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
குரங்கு நீர்வீழ்ச்சி
வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சோலையார் 2, ஆழியாறு 7, திருமூர்த்தி 9, வால்பாறை 1, மேல்நீராறு 8, கீழ்நீராறு 5, காடம்பாறை 18, சர்க்கார்பதி 5, வேட்டைக்காரன்புதூர் 10.40, மணக்கடவு 22, தூணக்கடவு 1, நவமலை 1, பொள்ளாச்சி 20, நல்லாறு 3, நெகமம் 62, சுல்தான்பேட்டை 25.
Related Tags :
Next Story