சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைக்க ஆய்வு பணி


சென்னிமலை  முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைக்க ஆய்வு பணி
x
தினத்தந்தி 8 Nov 2021 9:26 PM IST (Updated: 8 Nov 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைப்பதற்கான ஆய்வு பணியில் அறநிலையத்துறை பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை சீரமைப்பதற்கான ஆய்வு பணியில் அறநிலையத்துறை பொறியாளர்கள் ஈடுபட்டனர். 
முருகன் கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. மேலும் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்லும் வகையில் 9 வளைவுகளுடன் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை வசதியும் உள்ளது.
மலைப்பகுதி வழியாக சாலை அமைக்கும் பணி கடந்த 15-2-1963 அன்று தொடங்கப்பட்டது. இந்த பணி ஒரே ஆண்டில் நிறைவு பெற்று 15-2-1964 அன்று கார்கள் மட்டும் செல்லும் வகையில் மலைப்பாதை திறக்கப்பட்டது. பின்னர் 25-8-1964 அன்று அதிகாரப்பூர்வமான முறையில் பக்தர்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சாலை திறந்து வைக்கப்பட்டது.
சீரமைக்க கோரிக்கை
இந்த சாலை அமைப்பதற்காக 87 ஆயிரத்து 799 ரூபாய் செலவு ஆகும் என அப்போது திட்டமிடப்பட்டது. ஆனால் 32 சதவீதம் குறைவாக ரூ.58 ஆயிரத்து 576 மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டது.  இதனால் அந்த பணியை குறைந்த செலவில் செய்து முடித்த அப்போதைய அதிகாரிகளை பக்தர்கள் பாராட்டியதாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. தற்போது பஸ், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைப்பாதை வழியாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று வருகிறது. 
மழை காரணமாக தார் ரோடு சிதைந்து மண் அரிப்பு ஏற்பட்டு மலைப்பாதை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு கோவிலுக்கு செல்வதில் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே மழைக்காலங்களில் மலைப்பாதை ரோட்டில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
ஆய்வு பணி
இந்த நிலையில் கடந்த 23-7-2021 அன்று தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தார். அப்போது பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார் சாலை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு செல்லும் தார் சாலையை புதுப்பிக்கும் பணிக்கான ஆய்வு பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன் முன்னிலையில் அறநிலையத்துறையை சேர்ந்த பொறியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
விரைவில்
தார்சாலை புதுப்பித்தல், தார்சாலைக்கு மழை நீர் வராத வகையில் வடிகால் கட்டுதல், கல்வெட்டுக்கள் மற்றும் சாலையின் இருபுறமும் இரும்பு தகர தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதுகுறித்த திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story