திருச்சி ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது
திருச்சி ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது
கோவை
கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேறி திருச்சி ரோட்டில் ஆறாக ஓடிய தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
வீடுகளுக்குள் தண்ணீர்
கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகி றது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தடுப்பணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மழை காரணமாக லங்கா கார்னர், அவினாசி ரோடு சுரங்க பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் இரவு இடி- மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் கோவை- திருச்சி ரோடு ராமநாதபுரம் சண்முகம் வீதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன், சாக்கடை நீரும் புகுந்தது.
இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றி அகற்றினர்.
இதற்கிடையே கோவை- திருச்சி ரோடு சுங்கம் டெப்போ அருகே வாலாங்குளத்தில் இருந்து குளத்தின் உபரிநீர் நேற்றுமுன்தினம் முதல் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
நேற்று 2-வது நாளாக வாலாங்குளத்தில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக திருச்சி ரோட்டில் சவுரி பாளையம் பிரிவு தாண்டியும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் திருச்சி ரோட்டில் இருந்து ஓடிய தண்ணீர் ஒலம்பஸ் 80 அடி ரோடு, புலியகுளம் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் சந்திப்பு மற்றும் சண்முகம் வீதி, பூசாரி மாரியப்பன் வீதி, நாகப்பன் வீதி உள்ளிட்ட வீதிகளுக்குள் சென்றது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
சாலை மறியல்
மேலும் திருச்சி ரோட்டில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்லாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.
இதற்கிடை யே குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருச்சி ரோட்டில் திடீரென்று சாலை மறியலல் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள், மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது
நடவடிக்கை வேண்டும்
கனமழை காரணமாக வாலாங்குளம் நிரம்பியதால் உபரி நீர் வெளி யேறி திருச்சி ரோட்டில் ஆறு போல் செல்கிறது. சண்முகம் வீதி, நாகப்பன் வீதி உள்ளிட்ட வீதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது.
இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர் கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த பகுதியில் 6 அடி ஆழ பாதாள சாக்கடை மணல் மூடி 2 அடி ஆழமே உள்ளது.
இதனால் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இங்குள்ள பழையான வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்பதால் சேதம் அடையும் அபாயம் உள்ளது.
எனவே வாலாங்குளத்து தண்ணீர் ரோட்டில் செல்வதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கவும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story