காட்டு யானை மீண்டும் மயங்கி விழுந்தது
காட்டு யானை மீண்டும் மயங்கி விழுந்தது
இடிகரை
கோவை அருகே காட்டு யானை மீண்டும் மயங்கி விழுந்தது. அதற்கு முதுமலை கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காட்டு யானை
கோவையை அடுத்த துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் ஆனைக் கட்டி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக் காடு சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி அருகே சிறிய பள்ளத்தில் கடந்த 6-ந் தேதி 7 வயது காட்டு யானை ஒன்று வழுக்கி விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பொக்லைன் உதவியுடன் பள்ளத்தை சீர்படுத்தினர்.
உடல் நலக்குறைவு
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கோவனூர் கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் காட்டு யானைக்கு உரிய சிகிச்சைகள் அளித்தனர்.
பின்னர், அந்த காட்டு யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது. அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்,நேற்று காலை 7 மணியளவில் பூச்சியூர் கிரீன் கார்டன் அருகே உள்ள வனப்பகுதிக்கு வெளியே 250 மீட்டர் தொலைவில் வந் பட்டா நிலத்திற்குள் அந்த காட்டு யானை வந்தது.
அப்போது அந்த யானைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் காட்டு யானை மயங்கி கீழே விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த முதுமலை கால்நடை டாக்டர்கள் விரைந்து சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இரவு வரை சிகிச்சை
மேலும் சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், மாவட்ட வன விரிவாக்க அலுவலர் தினேஷ்குமார் ஆகியோரும் வந்து பார்வையிட்டனர்.
அந்த யானைக்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் உடல் நிலை மிகவும் சோர்வாக இருந்ததால், சுமார் 25-க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
குட்டி யானை என்பதால், உடனடியாக அந்த யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகியதால் சிகிச்சை அளிக்க ஏதுவாக யானையை சுற்றி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரம் என்பதால் மற்ற யானைகள் வரக்கூடும் என்பதால் சிகிச்சையில் உள்ள யானையை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரத்தில் வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story