ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 8 Nov 2021 10:13 PM IST (Updated: 8 Nov 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனக்கும், கோபி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது கணவர் வீட்டார் வரதட்சணை வாங்கவில்லை. எனது கணவர் மும்பையில் மத்திய அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து 20 நாட்கள் ஒன்றாக வாழ்ந்தோம்.
இந்த நிலையில் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். எனது தந்தை கூலி தொழிலாளி என்பதால் கணவர் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னையும், என் கணவரையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் எனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
ஆதார் கார்டு
தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்ட செயலாளர் குமார், கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மத்திய, மாநில அரசுகள் உட்பட அனைத்து பணிகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மேலும் பான் கார்டு, வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பி.எப்., எண் என அனைத்திலும், ஆதார் கார்டு இணைக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு வழங்கும் பணியை அரசு தாமாக முன்வந்து செயல்படுத்த வேண்டும்.
ஆனால், இ- சேவை மையம், கலெக்டர் அலுவலகம் என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, அவற்றை திருத்தம் செய்தல், புதிதாக எடுத்தல், கை ரேகை பதிவை புதுப்பித்தல், செல்போன் எண்ணை இணைத்தல் போன்ற பணிகள் செய்ய முடிகிறது. பல கோடி மக்கள் வாழும் தமிழகத்தில், ஒவ்வொருவர் ஆதாரிலும் சில பிரச்சினைகள் உள்ளதால், அவற்றை எளிமையாக, ஒரே நேரத்தில் அனைத்து வகையான திருத்தங்கள், புதுப்பித்தலை எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
வணிக வளாகம்
ஈரோடு வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘காஞ்சிகோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தைக்கு புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா தளர்வால் தற்போது சந்தை கூடுகிறது. இந்த கட்டிடம் திறக்காததால், வணிகர்கள் சாலை ஓரங்கள், மரத்தடிகளில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.
அங்கு பொதுமக்கள், வியாபாரிகளுக்குள் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளிக்கூடம் திறந்துள்ளதால், காலை, மாலையில் மாணவ -மாணவிகள் சென்று வர, இடையூறாக உள்ளது. எனவே புதிய வணிக வளாகத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.’ என்று கூறி இருந்தனர்.
ஆக்கிரமிப்பு
கொமராயனூர் ஊராட்சி மன்ற தலைவி விஜயா ராமு தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கொமராயனூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் கால்நடை மருத்துவமனை, விளையாட்டு மைதானம், வருவாயை பெருக்குவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயன்தரக்கூடிய பழவகை மரங்கள் வளர்க்கவும் இடம் தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் இடத்தை அளவீடு செய்யும்போது, சென்னம்பட்டி வனத்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் அவர் பஞ்சாயத்துக்கு தேவையான பணிகளை செய்ய விடாமல் மிரட்டுகிறார். இதனால் அந்த பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதேபோல் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story