தொடர் மழையால் பர்கூர் மலைப்பாதையில் 2 இடங்களில் மண் சரிவு நடுரோட்டில் ராட்சத பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


தொடர் மழையால் பர்கூர் மலைப்பாதையில் 2 இடங்களில் மண் சரிவு நடுரோட்டில் ராட்சத பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 5:02 PM GMT (Updated: 8 Nov 2021 5:02 PM GMT)

பர்கூர் மலைப்பாதையில் தொடர் மழையால் நேற்று 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பர்கூர் மலைப்பாதையில் தொடர் மழையால் நேற்று 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் ராட்சத பாறை  சரிந்து விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
ஈரோடு் மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தொடர்்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு மலைப்பாதையில் விழுந்ததால் 2 நாட்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறியது. தொடர் மழையால் செட்டிநொடி, நெய்கரை ஆகிய 2 இடங்களில் நேற்று மதியம் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ராட்சத பாறைகள் சரிந்து நடுரோட்டில் விழுந்தன.
போக்குவரத்து பாதிப்பு
மதியம் 2 மணிக்கு மேல் மலைப்பாதை வழியாக கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும், அதே போல் மைசூர் பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களும் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் வனத்துறை அதிகாரிகள், பர்கூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மலைப்பாதையில் கிடந்த ராட்சத பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பர்கூர் மலைப்பாதையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. ஆய்வு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நெய்கரைக்கு சென்று பார்வையிட்டு் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம், உடனே பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்று கூறினார். ஆய்வின்போது எம்.எல்.ஏ.வுடன் கோபி ஆர்.டி.ஓ. பழனி தேவி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் போலீசார் சென்றனர்.

Next Story