கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து 104 அடியை எட்டியது.
இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் கொடிவேரி அணை பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை பகுதி நேற்று மூடப்பட்டது. மேலும் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது. அதுமட்டுமின்றி கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கவும், மீன்பிடித்தல், துணி துவைத்தல் போன்றவற்றுக்காக ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொடிவேரி அணை பகுதியில் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் கொடிவேரி அணைக்கட்டு முகப்பு வாயிலில் தடுப்புகள் வைத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story