ஈரோட்டில் சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாலிபர்
ஈரோட்டில் சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்தார்.
ஈரோட்டில் சாலையில் கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்தார்.
ரூ.50 ஆயிரம்
ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 21). இவர் திண்டல் முருகன் கோவிலில் வாகன நிறுத்துமிடத்தில் டோக்கன் வினியோகம் செய்யும் பணி செய்து வருகிறார். நந்தகுமார் நேற்று மாலை ஈரோடு பொன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே கிடந்தது. அதை எடுத்து எண்ணி பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நந்தகுமார் அருகில் உள்ள கடைகளில் சென்று விசாரித்தார். மேலும், கீழே கண்டெடுத்த ரூ.50 ஆயிரத்தை அவர் போலீசில் சென்று ஒப்படைக்க உள்ளதாகவும், யாராவது பணத்தை தேடி வந்தால் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாங்கி கொள்ளுமாறும் அருகில் உள்ள கடைக்காரர்களிடம் கூறினார்.
பாராட்டு
அதன்பிறகு ஈரோடு டவுன் போலீசில் நந்தகுமாரிடம் பணத்தை ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் பணத்தை தேடி ஒருவர் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 55) என்பதும், ஈரோடு பொன்வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வரும் அவர், கடையில் இருந்து ரூ.2 லட்சத்தை நகை உருக்கும் கடைக்கு கையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றபோது ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஒரு ரூபாய் நோட்டு கட்டை தவறவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் முன்னிலையில் சோமசுந்தரத்திடம் ரூ.50 ஆயிரத்தை நந்தகுமார் ஒப்படைத்தார்.
சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை மனிதாபிமானத்தோடு உரிய நபரிடம் ஒப்படைத்த நந்தகுமாரை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
-----------
Related Tags :
Next Story