டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் இதுவரை 115 பேர் கைது
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டில் பல்வேறு அரசுப்பணிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற பலர், முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது.
இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் பலர் தொடர்புடைய முறைகேடு சம்பவம் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேடு குறித்து தேர்வு எழுதியவர்கள், போலீசார், டி.என்.பி.எஸ்.சி. பணியாளர்கள் உள்ளிட்ட 115 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர். ஏற்கனவே நடந்த குரூப்-2, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முறைகேடு குறித்தும் ஒட்டுமொத்தமாக விசாரித்து வருகின்றனர். எனவே இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றத்தேவையில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story