25 கோடி கோவில் நிலம் மீட்பு


25 கோடி கோவில் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 7:49 PM IST (Updated: 9 Nov 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

25 கோடி கோவில் நிலம் மீட்பு

கோவை

கோவை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வீரேஸ்வர சுவாமி கோவில் இருந்தது. சாலை விரிவாக்கப்பணிகளுக்காக அந்த கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. 

அந்த கோவிலுக்கு சொந்தமான 23 ஏக்கர் 43 சென்ட் நிலம் வேலந்தா வளம் ரோடு, பச்சியப்பன்தேவர் வீதியில் உள்ளது. 

அந்த கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பூசாரி ஒருவர் கொட்டகை அமைத்து இருந்தார். அது கடந்த 15 ஆண்டுகளாக பூசாரியின் ஆக்கிரமிப்பில் இருந்தது.

ரூ.25 கோடி

இது குறித்து தகவல் அறிந்த இந்து அறநிலையத்துறை இணை கமிஷ னர் செந்தில்வளவன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயலட்சுமி, கோவில் செயல்அதிகாரி சுந்தர்ராஜ், ஆய்வாளர் கீதா ஆகியோர் நேற்று கோவில் நிலத்துக்கு சென்றனர்.

அவர்கள், செட்டிப்பாளையம் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கொட்டகையை இடித்து அகற்றி அப்புறப்படுத்தினர். 

இதையடுத்து அங்கு இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று அதிகாரிகள் பெயர் பலகை வைத்தனர்.


இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட 23 ஏக்கர் 43 சென்ட் நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.25 கோடி ஆகும். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பெயர் பலகை அழிந்தது

இது போல் கோவையை அடுத்த காளப்பட்டி அருகே கைகோள் பாளையத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலம் உள்ளது. 

அங்கு இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்று வைக்கப்பட்டிருந்த பெயர்பலகை அழிந்து போய் இருந்தது. 

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் என்.லோகு இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். 

இதைத் தொடர்ந்து அந்த நிலத்தில் புதிய பெயர் பலகையை வைத்து நிலத்தை பாதுகாக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story