அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு


அறச்சலூர்-சென்னிமலை இடையே  கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு
x
தினத்தந்தி 9 Nov 2021 2:54 PM GMT (Updated: 9 Nov 2021 2:54 PM GMT)

அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டது.

அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டது. 
நீர் கசிவு
கீழ்பவானி பிரதான வாய்க்கால் அறச்சலூரில் இருந்து 2-ஆக பிரிகிறது. அதில் ஒரு பிரிவு சென்னசமுத்திரம் பகுதியையும், மற்றொரு பிரிவு சென்னிமலை வழியாக சென்று திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டியை அடைகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அறச்சலூர் - சென்னிமலை இடையே ஊதங்காட்டுப்புதூர் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் தலைப்பு மதகு பகுதியில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சீரமைப்பு
தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் (சென்னிமலை), சபரிநாதன் (காங்கேயம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீர் கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். 
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி  சீரமைத்தனர். பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் உடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 
உரிய நடவடிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் குறைந்த அளவில் தான் தண்ணீர் செல்கிறது. இதனால் வாய்க்கால் மதகில் ஏற்பட்ட உடைப்பு தவிர்க்கப்பட்டது. ஒருவேளை வாய்க்காலில் தண்ணீர் நிறைய செல்லும்போது உடைப்பு ஏற்பட்டு இருந்தால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள், வயல்வெளிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி பல இடங்களில் நடவு பணி நடைபெற்று வருகிறது அந்த பணியும் பாதிக்கப்பட்டு இருக்கும். 
கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்கனவே நல்லாம்பட்டி, உக்கரம், கூடத்துறை, வெள்ளிவலசு ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்படாமல் கரைைய பலப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவேண்டும்,’ என்றனர்.

Next Story