பாலாற்றின் குறுக்கே கட்டிய தரைப்பாலம் சேதம்


பாலாற்றின் குறுக்கே கட்டிய தரைப்பாலம் சேதம்
x
பாலாற்றின் குறுக்கே கட்டிய தரைப்பாலம் சேதம்
தினத்தந்தி 9 Nov 2021 9:05 PM IST (Updated: 9 Nov 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றின் குறுக்கே கட்டிய தரைப்பாலம் சேதம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள செங்கம் பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி- கோட்டூர் ரோட்டில் இருந்து சமுத்தூர் வழியாக கெங்கம்பாளையம் செல்லும் வழியில் குறுக்கே பாலாறு செல்கிறது.
இந்த ஆற்றை கடந்து செல்ல வசதியாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பாலம் அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது. 

இந்த நிலையில் ஆண்டுதோறும் மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தண்ணீர் தரைபாலத்தை மூழ்கடித்தப்படி செல்லும். இதற்கிடையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலம் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கெங்கம்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இங்கிருந்து சமத்தூர் அரசுப் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பாலம் மோசமாக இருப்பதால் பஸ் போக்குவரத்து இல்லை. 

இதனால் பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி, கோட்டூர் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கெங்கம்பாளையத்திற்கு பஸ்சில் வரவேண்டிய உள்ளது. அதுவும் ஒரே பஸ் தான் காலை, மாலையில் வந்து செல்கிறது.

தரைப்பாலம் மோசமாக இருப்பதால் அவசர சிகிச்சைக்கு நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை ஆம்புலன்சில் அழைத்து செல்ல முடியவில்லை. 
பாலத்தில் ஏற்பட்டு உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. தரை பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்டித் தரக்கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டால் பொள்ளாச்சியில் இருந்து சமத்தூர் வழியாக பாலத்திற்கு பஸ் போக்குவரத்து தொடங்க முடியும். இதன் மூலம் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். எனவே உயர்மட்ட பாலம் அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story