தக்காளி விலை கிடு கிடு உயர்வு


தக்காளி விலை கிடு கிடு உயர்வு
x
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தினத்தந்தி 9 Nov 2021 9:17 PM IST (Updated: 9 Nov 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை தக்காளி ஏலத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்  தங்கள்நிலத்தில் விளையும் தக்காளிப்பழங்களை தினசரி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஏலம் மூலம் விற்பனையாகும் தக்காளியை வாங்க கோவை  மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கின்றனர். 

கடந்த வாரம் அதிக அளவில் சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் கினத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை ஆனது. தற்போது நவம்பர் மாதத்தில் தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள் வர உள்ளதால் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்  ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட தக்காளி கிலோவிற்கு 35 ரூபாய்  அதிகமாக  விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த வகையில் கிலோவுக்கு வெண்டைக்காய் ரூ.35-க்கும், பொரியல் தட்டை பயிறு ரூ.45-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பச்சை மிளகாய் ரூ.22-க்கும், புடலங்காய் ரூ.15-க்கும், அவரைக்காய் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.15-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும் ஏலம் போனது.

தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் 60 ரூபாய்க்கு ஏலம் போனதால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனைசெய்யப்படுகிறது.

Next Story