கடம்பூர் அருேக உயர்மட்ட பாலம் கட்டக்கோரி மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கடம்பூர் அருகே உயர்மட்ட பாலம் கட்டக்கோரி பள்ளிக்கூட மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடம்பூர் அருகே உயர்மட்ட பாலம் கட்டக்கோரி பள்ளிக்கூட மாணவர்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாக்கம்பாளையம் கிராமம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதி கடம்பூர் மலைப்பகுதி. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடம்பூர் மலைப்பகுதி உள்ளது.
இந்த மலைப்பகுதியில் உள்ள கிராமம் மாக்கம்பாளையம். இந்த கிராமம் கடம்பூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலும், சத்தியமங்கலத்தில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கு சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தார் சாலை
இந்த கிராமத்தின் அருகே குரும்பூர், கோம்பையூர், கோம்பைதொட்டி, கோவிலூர், அரிகியம் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் குரும்பூர் பிரிவு வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. கரடு, முரடான பாதையில் மட்டுமே செல்ல முடியும்.
தினசரி சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 3 முறை மட்டுமே பஸ் வந்து செல்கிறது. அரிகியம், கோம்பைதொட்டி, மாக்கம்பாளையம் ஆகிய 3 மலைக்கிராமங்களில் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
காட்டாற்றில் வெள்ளம்...
இங்குள்ள மாணவ- மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்காக சத்தியமங்கலம், கடம்பூர் பகுதிக்கு தான் செல்ல வேண்டியது உள்ளது. இதற்காக மாணவ- மாணவிகள் அங்குள்ள குத்தியாலத்தூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய 2 பள்ளங்களை கடந்து செல்லவேண்டும். இந்த 2 பள்ளங்கள் வழியாகவும் காட்டாறு செல்கிறது. எனவே மழைக்காலங்களில் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விடும். மேலும் காட்டாற்று வெள்ளத்தில் பஸ் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் நடைபெற்று உள்ளன. அவ்வாறு காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது மாக்கம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்கள் தனித்தீவு போல் ஆகிவிடும்.
போக்குவரத்து துண்டிப்பு
பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாது. குறிப்பாக மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாது. வெள்ளம் வடிந்த பின்னர்தான் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியும். இதன்காரணமாக மாணவ- மாணவிகள் படிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே மாக்கம்பாளையம் கிராமத்துக்கு செல்ல உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாக்கம்பாளையம் கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட திரளானோர் திரண்டு கடம்பூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள சத்தியமங்கலம் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்ததும் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர், சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘விரைவில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மதியம் 1 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் கடம்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
---
Related Tags :
Next Story