மதுரை அரசு ஆஸ்பத்திரி காசாளர் உள்பட 5 பேர் கைது

மதுரை அரசு ஆஸ்பத்திரி காசாளர் உள்பட 5 பேர் கைது
மதுரை,
மதுரை குலமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழ்மொழி (வயது 26). இவரிடம் பரவையை சேர்ந்த லதா, மதுரை அரசு ஆஸ்பத்திரி காசாளர் தங்கவேல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாண்டிசெல்வம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர்.
அதனை நம்பி தமிழ்மொழி அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (34). இவருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த மூர்த்தி, அவரது மனைவி சாந்தி, காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் (40) ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி அவர்களிடம் ரூ.8 லட்சம் கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
கோவையை சேர்ந்தவர் பொன்னிலா (31). இவருக்கு வருவாய்துறையில் வேலை வாங்கி தருவதாக மதுரை செல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் (51), திருமங்கலத்தை சேர்ந்த சோனைமுத்து, ராமர் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் வேலை வாங்கி தராததால் பொன்னிலா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story