ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 5-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து காப்பு கட்டி இருந்த பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன் உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பச்சைமலை
இதேபோல் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணி அளவில் சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து சாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோபி, மொடச்சூர், கரட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோபி
கோபி டவுன் அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி முருகர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வடக்கு வீதி பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகருக்கு 12 வகையான வாசனை திரவியங்கள் கொண்ட பொருட்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சிவகிரி
சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் நேற்று காலை 6 மணி அளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வேலாயுதசாமி வள்ளி-தெய்வானைக்கு மணமக்கள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு முன்பாக யாகங்கள் நடத்தப்பட்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story