குளிர்பான ஆலை, தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பேச்சு


குளிர்பான ஆலை, தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2021 10:49 PM IST (Updated: 10 Nov 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

குளிர்பான ஆலை மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது என்று ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறினார்.

குளிர்பான ஆலை மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது என்று ஈரோட்டில் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறினார்.
ஆறுகள் ஆக்கிரமிப்பு
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், காவிரி அதன் துணை ஆறுகள் நொய்யல், பவானி, உப்பாறு, அமராவதி, குடகனாறு, திருமணிமுத்தாறு, கொள்ளிடம் வளம் மீட்பு திட்டமிடல் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. 
இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமை தாங்கினார். வளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி முன்னிலை வகித்தார். 
விற்பனை செய்யக்கூடாது
கூட்டத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்வாய்கள் மனிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் ஆறுகள் அப்படியல்ல. அவைகள் சுதந்திரமான நீரோட்டமாக இருக்க வேண்டும். அவைகளை தடுக்கக்கூடாது. அதன் போக்கில் மனிதர்கள் வாழ வேண்டும். அவை பொருளாதாரத்தை உயர்த்துபவை. தற்போது ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டும், தனியார் மயமாகி, அத்தனை ஊர்களின் கழிவு நீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலக்கும் இடமாகவே உள்ளது. முற்றிலும் மாசுபட்ட நீராகிவிட்டது. எனவே குளிர்பான ஆலை மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஆற்றுநீரை விற்பனை செய்யக்கூடாது
கூடுதல் தண்ணீர் தேவை
பெரும்பாலான நாடுகளில் ஆறுகள் முக்கிய நகரங்களுக்கு இடையே செல்கின்றன. அங்கெல்லாம், ஒரு சொட்டு கழிவு நீர் கூட, ஆற்றில் கலப்பதில்லை. நீர் நிலைகளை ஒட்டி மேய்ச்சல் நிலம், விவசாய நிலம், பொது இடமாக வைத்துள்ளனர். அதனால், அவர்கள் வளம் பெறுகிறார்கள். நமது நாட்டில், நீர் நிலைகளை சுற்றிலும் ஆலைகள் இயங்குகின்றன.
பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால், கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும், தடை ஏற்படுத்தியும், ஆலைகளின் பயன்பாட்டுக்கு தண்ணீர் வழங்கும் இடமாகவும் மாறிவிட்டன. இதனால் மழை பெய்யும் பருவமும், பயிர் செய்யும் காலமும் மாறிவிட்டது. இதன் காரணமாக கூடுதல் தண்ணீர் தேவை, அழிவுகள் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய நிபுணர்கள், வேளாண் பல்கலை கழகங்களை அரசு அணுகி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தெலுங்கானா நீர் மேலாண்மை முகமை தலைவர் பிரகாஷ்ராவ், ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., கோவை தனசேகரன், இளங்கோவன், கவின் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story