போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
கோவை
கோவை-அவினாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலையில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு மாநகர போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இருந்தபோதிலும் இங்கு கடந்த சில நாட்களாக திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். இது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். இங்கு உள்ள காவலர் குடியிருப்பில் இந்த ஆண்டில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.
இந்த நிலையில் ஆயுதப்படை போலீசாரான ராஜன் என்பவர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகையை திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை
இதுபோன்று அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ்காரர் ரமேஷ் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் திருடி சென்றனர். மேலும் அதே குடியிருப்பில் மற்றொரு போலீஸ்காரர் ஒருவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்ததுள்ளது.
இந்த சம்பங்கள் குறித்து அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அத்துடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீடுகளில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இதுதவிர மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீடுகளுக்குள் சென்று மோப்பம்பிடித்து வெளியே சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதையடுத்து திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அந்த குடியிருப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story