முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்


முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 11 Nov 2021 12:02 AM IST (Updated: 11 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி விழாவையொட்டி திண்டுக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர் கோவில் குருக்கள் குருநாதன் தலைமையில் மாலை மாற்றுதல் செய்து முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, மணியம் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில், வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று காலை முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணியசுவாமி கோவில், என்.ஜி.ஓ. காலனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story