குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 11 Nov 2021 8:10 PM IST (Updated: 11 Nov 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை

கோவையில் தொடர் மழை காரணமாக குண்டும், குழியுமாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

குண்டும், குழியுமான சாலைகள்

 கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 109 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், தடுப்பணைகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனாலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்த மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. கோவை உக்கடம் -செல்வபுரம் பைபாஸ் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. 

அங்கு தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணல் கொட்டப்பட்டு வருகிறது. பாலசுந்தரம் ரோடு, திருச்சி ரோடு மற்றும் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

வாகன ஓட்டிகள் அவதி

கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டன. 

ஆனால் அதன்பிறகும் தார்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பெய்த மழையால் இந்த சாலைகள் மேலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. 

செல்வபுரம் பைபாஸ் சாலையில் இருந்து கோவைப்புதூர் செல்லும் புட்டுவிக்கி சாலையும் பழுதாகி உள்ளது. 

எனவே அந்த வழியாக கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிலர் விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது.

தண்ணீர் தேங்கி நிற்கிறது

காந்திபார்க்கை அடுத்த சலீவன் வீதி, போத்தனூரில் இருந்து செட்டிப் பாளையம் செல்லும் சாலை, சீரநாயக்கன்பாளையம் சாலை, ஆத்துப் பாலத்தில் இருந்து குனியமுத்தூர் செல்லும் சாலை, சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் இருந்து நீலிக்கோணாம்பாளையம் செல்லும் சாலை,

 எஸ்.ஐ.எச்.எஸ். காலனி செல்லும் சாலை, வெள்ளலூர்- சிங்காநல்லூர் சாலைகளும் மிகவும் சேதமடைந்து உள்ளது. அதில் மழைநீரும் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

சேறும் சகதியுமான மார்க்கெட்டுகள்

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட், அண்ணா தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. 

அங்குள்ள சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்

எனவே கோவை பகுதியில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்க, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story