திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 12 Nov 2021 12:07 AM IST (Updated: 12 Nov 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

தீப திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று (11-ந்தேதி) முதல் வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் கோவிலுக்குள் உள்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு விசேஷ பூஜையும், சர்வ அலங்காரமும் நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சாமி, அம்பாள் அருள் பார்வையில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் பன்னீர், புனிதநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.

கொடியேற்றம்

மேலும் 10.5 மணிக்கு கம்பீரமாக கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கொடி கம்பத்தில் மா இலை, தர்ப்பை புல், பூமாலை கொண்டு அலங்கரிக்கப் பட்டது. மேலும் கொடிகம்ப உயரத்திற்கு வாசனை கமழும் வண்ண மலர்கள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து கொடி கம்பத்திற்கும், சுவாமி, அம்பாளுக்குமாக மகா தீப, தூப, ஆராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கொடியேற்றப்பட்டதும் அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்
திருக்கார்த்திகை தீபதிருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு 7 மணியளவில் தினமும் வெவ்வேறு வாகனத்திலுமாக சாமி புறப்பாடு நடப்பது வழக்கமாகும்.
ஆனால் ஊரடங்கு காரணமாக பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு தவிர்க்கப்பட்டுஉள்ளது. கோவிலுக்குள்ளே உள்திருவிழா நடைபெறுவதால் காலை, மாலை ஆகிய இருவேளையிலுமாக மரசிம்மாசனத்தில் அம்பாளுடன் சாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தை வலம் வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18 -ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணிக்குள் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது

மலையில் மகாதீபம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந்தேதி மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில வழக்கம்போல கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 20-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story