மார்க்கெட்டுக்கு மதுரை மல்லிகைப்பூவின் வரத்து வெகுவாக குறைந்தது


மார்க்கெட்டுக்கு மதுரை மல்லிகைப்பூவின் வரத்து வெகுவாக குறைந்தது
x
தினத்தந்தி 12 Nov 2021 2:16 AM IST (Updated: 12 Nov 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மழையின் காரணமாக மார்க்கெட்டுக்கு மதுரை மல்லிகைப்பூவின் வரத்து வெகுவாக குறைந்தது.

மதுரை,
மழையின் காரணமாக மார்க்கெட்டுக்கு மதுரை மல்லிகைப்பூவின் வரத்து வெகுவாக குறைந்தது. 
மல்லிகைப்பூ
பெண்கள் சூடும் பூக்கள் பலவகை இருந்தாலும், மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
 மதுரை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்தும் மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்கள் வருகின்றன. அதன் மூலம் சராசரியாக தினமும் 8 முதல் 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இதுதவிர வெளி மாவட்டங்களுக்கும், வெளிநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மதுரையில் தற்போது மழை காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.1200 முதல் ரூ.1500 வரை இருந்தது. இதுபோல் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை ரூ.600 முதல் ரூ.700 வரை இருந்தது. முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.150 என விற்பனையானது. கனகாம்பரம், மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை, பட்டன்ரோஸ், ரோஜாப்பூவின் விலையும் சற்றே அதிகம் தான்.
வியாபாரிகள் கருத்து
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "மல்லிகைப்பூவிற்கு பனியும், மழையும் ஆகாது. மழை, பனிக்காலங்களில் பூக்களின் உற்பத்தி குறைந்து விடும். அந்த காலங்களில் மதுரை மார்க்கெட்டுக்கு ஒரு டன் முதல் 2 டன் வரையே மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு வரும். அதாவது, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பூக்களின் வரத்து குறைவாக இருக்கும். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பூக்களின் வரத்து அதிகமாக இருக்கும்.
தற்போது மதுரை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் மழை இருப்பதால், அங்கிருந்தும் குறைந்த அளவிலேயே பூக்களை கொண்டு வருகின்றனர். இதுஒரு புறம் இருக்க, வரும் நாட்களில் முகூர்த்த தினங்கள் இருப்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிரிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.

Next Story